வக்பு வாரிய சட்டத்தின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், ஆளும் தரப்பின் ஆதரவில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகியது.
ஆனால், இந்த வக்பு திருத்தச் சட்டத்தை பல்வேறு சமூக அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஓய்வு பெற இருப்பதை சுட்டிக்காட்டி, விரிவான விசாரணை தேவை என்றும் புதிய தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை கடந்த மே மாதத்தில் விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்கிவி உள்ளிட்டோர் பல்வேறு தரப்புகளின் சார்பில் முக்கிய வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. அதில், வக்பு வாரியத்தில் உறுப்பினராக சேர, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த விதி தொடர்பான புதிய, தெளிவான விதிகள் உருவாக்கப்படும் வரை அதை நடைமுறையில் அமல்படுத்த கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, இனி வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க “5 ஆண்டுகள் இஸ்லாமியர் ஆக இருந்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனை தற்காலிகமாக செல்லாது. மேலும் வக்ஃபு சொத்துக்களின் உரிமை தொடர்பாக உயர் நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும்.. மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அனுமதிக்க இயலாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
Read more: அவகேடோ எவ்வளவு நல்லதா இருந்தாலும் சரி.. இவர்களெல்லாம் அதை சாப்பிடவே கூடாது..!