வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர்பாக, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வருவாய்த் துறையில் உள்ள மாவட்டங்களில் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளருக்கு (General Personal Assistant) ஏற்கனவே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட விவரங்களை விரைவில் அறிக்கையாக அரசுக்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இந்த உத்தரவு, பணியாளர் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த வருவாய்த் துறையின் பணிகள் சீராக நடைபெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.