கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோயில், தொன்மை, கட்டிடக் கலை, ஆன்மிக மகிமை ஆகியவை ஒருங்கிணைந்த புனிதத் தலமாக விளங்குகிறது.
இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால், குறிப்பாக ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு இன்றி இருந்தபோதும், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசி சுவாமிகள் இதை புதுப்பித்து திருப்பணி செய்தனர். தற்போது இது இந்துச் சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
மூலவராக பூலோகநாதர் அருள்பாலிக்கிறார். “பூவுலகையே காக்கும் இறைவன்” என்று பக்தர்கள் நம்புகின்றனர். இவருடன் புவனாம்பிகை தாயார் அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் பெருமை என்னவெனில், சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது என்பது. இதுவே இக்கோயிலின் தனிச்சிறப்பு.
கோயில் அமைப்பு: கிழக்கே உயரமான ராஜகோபுரம், தென்கிழக்கில் மகாகணபதி, வடகிழக்கில் பாலசுப்ரமணியர், உள்புறத்தில் மஹாலட்சுமி, சூரியன், சந்திரன், தட்சணாமூர்த்தி, பிரம்மா ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன. வடக்கே தனியாக காலபைரவர் சன்னதி உள்ளது. தெற்கு வாயிலில் நுழைந்தவுடன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தரிசனம் கிடைக்கிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து கிழக்கை நோக்கினால் ராஜகோபுரம், கொடிமரம், நந்தி ஆகியவை ஒரே கோணத்தில் தென்படும். மேற்கே பூலோகநாதர், வடக்கே பெருமாள், வடகிழக்கில் ஆஞ்சநேயர் மூவரையும் ஒரே பார்வையில் தரிசிக்க முடிவது இத்தலத்தின் அரிய அனுபவம்.
சிறப்பு சன்னதிகள்: லிங்கோத்பவர், முருகன் (முத்துக்குமாரசாமி), விஷ்ணு துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் கோயிலில் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதியிலிருந்து பார்க்கும்போது ராஜகோபுரம் முதல் பூலோகநாதர் வரை 10 தெய்வங்களை ஒரே கோணத்தில் தரிசிக்கலாம் என்பது அற்புதமான ஆன்மிக அனுபவம்.
பூமி பிரச்சனைகளுக்கான தீர்வு: இக்கோயிலில் வலம் வரும்போது மணலில் நடந்து செல்லும் வழிபாடு வழக்கம். இது “பூலோக தரிசனம்” எனப் பொருள்படும். இதனால் பூமி சம்பந்தமான பிரச்சனைகள், திருமணத் தடை, குழந்தையின்மை போன்றவை அகலும் என நம்பப்படுகிறது. மேலும் இது கால்களுக்கு இயற்கை அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதாகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
Read more: வீட்டில் செல்வத்தை பெருக்கும் மணி பிளான்ட்.. திருடி நட்டு வைத்தால் அதிர்ஷ்டம் சேருமா..?



