இந்த நவம்பர் மாதம் பல புதிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் வகையில், சில சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மீண்டும் வெளியீட்டு (Re-Release) பட்டியலும் நீண்டுள்ளது. திரையரங்கில் இத்திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் வெளியாகிறது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று வெளியான இப்படம், சினிமா துறையில் சாதிக்க விரும்புவோருக்கு ஓர் உன்னதமான படைப்பாக கருதப்படுகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றி பெற்ற இப்படம், வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வருகின்ற நவம்பர் 6, 2025 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
அதேபோல், இயக்குநர் சேரன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த மனதை வருடும் காதல் காவியமான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இப்படம், வருகின்ற நவம்பர் 14, 2025 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது, திரைப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



