கோவை அரசு தலைமை மருத்துவமனை, மேற்கு தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகிச்சை மையமாக திகழ்கிறது. தினசரி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் பல்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த மருத்துவமனை எப்போதும் கூட்டம் நிறைந்த நிலையில்தான் இருக்கும்.
நோயாளிகளை சிகிச்சை பிரிவுகளுக்கும், சிகிச்சை முடிந்த பின் வார்டுகளுக்கும் அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் அங்கு உள்ளது. ஆனாலும், அதிக நோயாளிகள் இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில், 70 வயது முதியவர் ஒருவருக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு, கட்டு போடப்பட்டிருந்தது.
அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அவரது மகன் சக்கர நாற்காலி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஊழியர்கள், “காத்திருங்கள்” என கூறியதால், அவர் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை. தந்தைக்கு நடக்க முடியாத நிலை என்பதால், வேறு வழியின்றி மகன், தந்தையை தனது உடலில் சாய்த்து, தோளில் சுமந்தபடி மேல் தளத்திலிருந்து கீழே இறக்கினார். பின்னர் அவரை இழுத்தபடியே மருத்துவமனை வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவிற்கு கொண்டு சென்றார்.
அந்த காட்சிகளை அங்கு இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோக்கள் வைரலாகி, மருத்துவமனையின் சேவை மற்றும் தரத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் உடனடியாக விசாரணை நடத்தினார். அதன்பேரில், மருத்துவமனை ஊழியர்களான எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகியோர் சக்கர நாற்காலி வழங்குவதில் அலட்சியம் காட்டியதாகக் கூறப்பட்டதால், 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வீடியோ வைரலான நிலையில் மருத்துவமனை நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாதது எப்படிச் சாத்தியம்? என ஒரு பயனர் கேள்வி எழுப்பினார். ஊழியர்கள் மனிதாபிமானம் இன்றி நடந்துகொள்வதால் தான் இப்படி சம்பவங்கள் நடக்கிறது என மற்றொரு பயனர் கூறினார். இந்த சம்பவம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் நோயாளி சேவைகளின் தரத்தைப் பற்றி பெரிய விமர்சனத்தை கிளப்பியுள்ளது.