ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் இணைந்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாகேந்திரன் சேதுபதி அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.
மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்யப்பட்டது. 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைப் பலப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசான நாகேந்திரன் சேதுபதி, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதன்மூலம் குறிப்பிட்ட சமூக வாக்குகளைப் பெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.