கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டு, தவறாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து whatsapp மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அந்த அந்தப் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்துடன் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.