இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை கவலைக்கு மருந்தாகவும், பொழுதுபோக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. வரும் தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் சத்தம் ஒரு விதமாகவும் இருக்கும். கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியுள்ளது. இன்றைய இசையின் நிலை, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.
பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன.இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை தடுக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும்.
உலக இசை தினம் இசையின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதையும், உலகளாவிய இசையின் மூலம் சமூக உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை முன்னிறுத்தியே 1982 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலக இசை தினம் கொண்டாடப்பட்டது. 1000 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் தெருக்களிலும் பூங்காக்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர், உலக இசை ரசிகர்களைக் குளிரக் குளிர இசை மழையில் நனைய வைத்த இந்த நிகழ்வானது மாபெரும் வெற்றியைப் பெற்றது. எனவே அந்த தினத்தையே உலக இசை தினமாக அறிவிட்து விட்டால் என்ன என்று யோசித்தார் அன்றைய ஃப்ரெஞ்சு கலாச்சார அமைச்சராக இருந்த ஜாக் லாங். அப்படி கலாச்சர அமைச்சர் மற்றும் பிரபல ஃப்ரெஞ்சு பத்த்திரிகையாளரும், இசை தயாரிப்பாளருமான மாரிஸ் ஃப்ளூரெட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது தான் உலக இசை தின விழா கருத்தாக்கம்.
இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்பதற்கேற்ப அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு இன்று உலகம் முழுவதும் பரவி அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாகியிருக்கிறது. இன்றைய தினம் உலகின் பல்வேறு இசை வடிவங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். புதிதாக இசை கற்றுக் கொள்ளத் தொடங்கலாம். இசைக்கருவிகளை இயக்க ஆர்வம் கொள்ளலாம். அது தவிர, உலகம் முழுவதிலும் உள்ள அனேக பள்ளி கல்லூரிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் முதல் தன்னம்பிக்கை மிகுந்த இசைக்கலைஞர்கள், இசையில் சாதித்த மூத்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இந்நாளில் கெளரவிக்கிறார்கள். அவர்கள் மூலமாக இசை கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கிறார்கள்.