கொல்கத்தா ரசிகர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க தான் சென்னை அணி ஜெர்ஸியில் வந்துள்ளனர் என தனது ஓய்வு குறித்து தோனி மீண்டும் பேசியிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது சென்னை அணி. இதில் டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் கான்வே, ராகனே, துபே உள்ளிட்ட 3 வீரர்கள் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியின் அபார பந்துவீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
போட்டி முடிந்த பின்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி பதிலளித்தார். அதில் கொல்கத்தா மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாகவே காட்சி அளித்தது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி, இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு (Farewell) பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி என கூறினார். இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன் என தோனி பேசினார்.
கடந்த போட்டியிலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பாதாகவும் அதனை மகிழ்ச்சியாக அனுபவித்து வருவதாக பேசியிருந்தார். தோனி தொடர்ந்து தனது ஓய்வு குறித்து சூசகமாக பேசி இப்போழுது இருந்தே தனது ரசிகர்களை தேற்றி வருவதாக சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர்.