தூத்துக்குடி சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் ஜெமீலா. கணவன் இறந்துவிட்ட நிலையில் ராஜேஸ்வரி தனது வீட்டில் சிறிய பெட்டிக்கடை வைத்து வருமானம் ஈட்டி வருகிறார். பீகாம் பட்டதாரியான ஜெமிலா பெனோ என்ற நபரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு ஜெமீலா தனது கணவர் வீட்டில் மாமனார் மாமியாரோடு வசித்து வந்துள்ளார். ஜெமீலா மற்றும் பெனோ தம்பதியினருக்கு மூன்று முறை குழந்தை உண்டாகி கருக்கலைப்பு நடந்துள்ளது. இதனால் அவருக்கு குழந்தை இல்லாததை குத்தி காட்டி கணவர் குடும்பத்தினர் மனம் புண்படும்படி தொடர்ந்து பேசி உள்ளனர்.
இதற்கிடையே பெனோ ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். அந்த பணத்தை மனைவியின் 5 பவுன் நகையை அடகு வைத்து கட்டி உள்ளார். தொடர்ந்து இவர் வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்தார். இந்நிலையில் பெனோ வசித்து வந்த வீட்டை அவரது தந்தை தனது மற்றொரு மகளான புனிதாவிற்கு எழுதிக் கொடுத்து, வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
கணவர் விட்டார் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஜெமிலா சகாயபுரத்தில் உள்ள தனது வீட்டில் தாய் ராஜேஸ்வரி உறங்கிக் கொண்டிருக்கும் போது கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த விசாரணையை தொடங்கினர்.
அந்த கடிதத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட பெனோவுக்கு என்னை விட அவர் சகோதரிகள் குடும்பம் தான் முக்கியம். இனிமேல் அவருடன் சென்று குடும்பம் நடத்தினாலும் நிம்மதியாக இருக்க முடியாது. உங்களை விட்டுவிட்டு இப்படி நான் பண்ணக்கூடாது. ஆனால் என்னால் முடியவில்லை அம்மா. கணவர் வீட்டில் அவர்கள் பண்ணுவதுதான் சரி நான் தப்பு என்று சொல்றாங்க. அவங்க என்ன பேசினாலும் நான் கேட்டுக்கிட்டு இருக்கணும் அப்படின்னு எதிர்பார்க்கிறார்கள்.
அம்மா நான் திரும்ப அந்த வீட்டுக்கு போனாலும் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாங்க. என்னை மன்னித்துவிடு, நான் உன்னை விட்டு செல்கிறேன், என்னுடைய நகைகளை வாங்கி இருக்கும் கடனை அனைவருக்கும் கொடுத்துவிட்டு நீயும் என்னுடன் வந்துவிடு, நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று மனம் உருகி கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்போது அந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் பெனோ குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



