தகவல் தொழில்நுட்ப (IT) ஊழியர்களில் சுமார் 84 சதவீதம் பேர் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோயால் (MAFLD) பாதிக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் IT துறை 5.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஐடி ஊழியர்களில் சுமார் 71 சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாகவும், சுமார் 34 சதவீதம் பேர் வளர்சிதை மாற்ற நோய்க்குறி இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் கல்யாண்கர் மகாதேவ் மற்றும் பேராசிரியர் சி.டி. அனிதா, அவர்களது ஆராய்ச்சி அறிஞர்கள் பரம் பார்கவா மற்றும் நந்திதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து, ஆசிய இரைப்பை குடல் நோய் நிறுவனம் (AIG) மருத்துவமனையின் மூத்த ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் பி.என். ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து நடத்தினர் .
இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்ன? இந்திய ஐடி ஊழியர்களிடையே இந்த நோய் எதனால் ஏற்படுகிறது? இது எவ்வளவு தீவிரமாக இருக்கலாம்? என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்ன? இந்த ஆய்வு கொழுப்பு கல்லீரல் நோயை ஒரு சுகாதார நெருக்கடி என்று வரையறுக்கிறது, இது பல்வேறு நடத்தை மற்றும் வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகளால் கல்லீரலில் 5 சதவீதத்திற்கும் அதிகமான கொழுப்பு சேரும்போது ஏற்படுகிறது.
இதற்கிடையில், மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது ஒரு கல்லீரல் பிரச்சனை என்றும், இது குறைவாகவோ அல்லது மது அருந்தாதவர்களாகவோ இருப்பவர்களைப் பாதிக்கிறது என்றும் மேயோ கிளினிக் தெரிவித்துள்ளது. NAFLD-யில், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. இது பெரும்பாலும் அதிக எடை அல்லது பருமனானவர்களில் காணப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் இப்போது ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (SLD) என்று அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து இது இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் மேலும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி இதய நோய்களையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் குறிப்பாக சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
இது தொடர்பான ஆய்வில், இந்தப் பிரச்சினையை தவிர்க்க வழக்கமான சுகாதார பரிசோதனைகள் அவசியம் என்றும் மன அழுத்த மேலாண்மையை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.