இளம் வயதிலேயே உடல் பருமன், புகைப்பழக்கம், மோசமான உணவுப்பழங்கள், உடற்பயிற்சியின்மை, நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற இணை நோய்களும், இதயநோய் கொண்ட குடும்ப பின்னணியும் உள்ள ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, தற்போதைய உலகில் இளம் வயதிலேயே தவறான பழக்க, வழக்கங்கள், மோசமான வாழ்வியல் நடவடிக்கைகள் போன்றவற்றால், இதய நோய்கள் வருகின்றன. இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், ”இளம் வயதினரிடையே இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நடுத்தர வயது மற்றும் வயது முதிர்வு போன்ற காலங்களில் இதயநோய் குறித்த அபாயங்களை தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான வாழ்வியல் நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம். 20 முதல் 39 வயது வரையிலான இளைஞர்கள் 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதயநோய் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதே வயதுப் பிரிவினரில், ஏற்கனவே இதயநோய் கொண்ட குடும்ப பின்னணியை சேர்ந்தவராக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். மொத்த கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் புகைப்பிடித்தல், பிஎம்ஐ குறியீடு, உடல் இயக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இதயநலன் தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்க இதயநல சங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.