கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்கி வருகிறது.

அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது. பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது கடின செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் இருந்தாலும் உடனே கடன் கிடைத்துவிடாது. ஆனால், எவ்வித உத்திரவாதமின்றி கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற முடியும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடனுக்கு வட்டி சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது 16 -18 % வரை வட்டி விதிக்கப்படும். இக்கடன்களை 36 மாதங்கள் வரை இஎம்ஐ-ஆக செலுத்த முடியும்.

அதே நேரம் இந்த கடனுக்கும், கிரெடிட் லிமிட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கூடுதலாக எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவது சுலபமான ஒன்று. கிரெடிட் ஸ்கோர் மற்றும் கார்டை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கடனை வழங்குகிறது. அதில் உள்ள சலுகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. இதன் காரணமாக நமக்கு தேவைப்படும் போது நம்மால் கடன் பெற முடியும். இந்த வாய்ப்புகள் உங்களுக்கு வேண்டுமெனில், கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்த வேண்டும். இஎம்ஐகளை முறையாக செலுத்த வேண்டும். அத்துடன் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.