நாட்டின் பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) 2 லட்சத்திற்குள் தொடங்கப்படும் நிரந்தர வைப்புத்தொகை அதாவது ஃபிக்சட் டெபாசிட்களின் (Fixed Deposits) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய நடைமுறை கடந்த சனிக்கிழமை முதல் அமலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் (பேசிஸ் பாயிண்ட்ஸ்-basis points (bps)) உயர்த்தியுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் முடிவடையும் ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்ட்கள் முதல் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு 3.75% முதல் 6.50% வரை வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வட்டி விகிதம் உயர்வின் விவரம்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடுத்த ஏழு நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் முடிவடையும் டெபாசிட்களுக்கு 15 பேசிஸ் பாயிண்ட் வரை அதாவது 3.60% முதல் 3.75% வரை, அடுத்த 46 முதல் 90 நாட்களுக்குள் முடிவடையும் டெபாசிட்களுக்கு 20 பேசிஸ் பாயிண்ட் வரை அதாவது 3.85% முதல் 4.05% வரை வட்டி வழங்கப்படுகிறது. இனி, 91 முதல் 179 வரை நாட்களுக்குள் இருக்கும் ஃபிக்செட் டெபாசிட்களுக்கு 4.20% வட்டியும், 180 முதல் 269 வரை உள்ள டெபாசிட்களுக்கு 4.85% வட்டியும், 270 நாட்கள் முதல் ஓராண்டு வரை உள்ளவைகளுக்கு 5.25% வட்டியும் வழங்கப்படும்.
இதுபோலவே, இரண்டு ஆண்டுகளுக்கு போடப்படும் ஃபிக்செட் டெபாசிட்களுக்கு 6.40% வட்டி வழங்கப்படும். இது முன்பு வழங்கப்பட்டு வந்த 6.30%-த்தை விட 10 பேசிஸ் பாயிண்ட்கள் அதிகமாகும். மேலும், 444 நாட்களில் முடிவடையும் டெபாசிட்களுக்கு 15 பேசிஸ் பாயிண்ட்கள் உயர்த்தப்பட்டு 6.40% – இல் இருந்து 6.55%- ஆக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் முதல் மூன்றாண்டுகள் வரை எனில் 6.30% முதல் 6.40% வரையும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு 6.40% முதல் 6.50% வரையும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு (80 வயதிற்க்கு மேற்பட்டவர்கள்) கூடுதலாக 0.75% வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகளில் சிறுசேமிப்பு திட்டங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்.