பொதுவாக புகைபிடிக்கும் பழக்கம் உயிருக்கு கேடு என்ற வாசகத்தை பல இடங்களில் படித்திருப்போம். இதே போல் புகைபிடிக்கும் பழக்கம் நம்மை மட்டும் அல்லாது நம் சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து புகைப்பிடிக்கும் போது நமக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்திற்கும் ஆபத்தை விளைவித்து உயிருக்கு உலை வைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவர் புகைபிடிக்கும் போது அவரின் அருகில் குடும்பத்தார்களோ அல்லது மற்றவர்களோ இருக்கும்போது அவர்கள் இரண்டாம் நிலை புகையை சுவாசிக்கிறார்கள். அதாவது புகை பிடிப்பவர் புகையிலையில் உள்ள பாதி ரசாயனங்களை மட்டும் தான் நுரையீரலின் உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். புகைப்பிடிப்பவருக்கு அருகில் இருப்பவர்களும் அந்த புகையிலையின் ரசாயனங்களில் பாதியை சுவாசிப்பது தான் இரண்டாம் நிலை புகையை சுவாசிக்கிறார்கள் என்ற அர்த்தமாகும்.
குறிப்பாக புகைபிடிக்கும் நபருக்கு பாதிக்கப்படுவதை விட புகை பிடிக்காத நபர் புகையினால் அதிக அளவு பாதிக்கப்பட்டு நுரையீரல் புற்று நோய் பாதிப்பிற்கு உள்ளாகிறார். புகை பிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் காரணம் கேட்டால் மன அழுத்தத்தால் புகை பிடிக்கிறேன் என்று தான் கூறுவார்கள். ஆனால் புகை பிடிப்பவரை விட புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாம் நிலை புகையை அதாவது புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்து புகையை சுவாசிக்கும் போது கர்ப்பிணிகளுக்கு எடை குறைந்த பிரசவம் ஏற்படுவது, இதய நோய், மன அழுத்தம், குழந்தைகளுக்கு சுவாசம் மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.