அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது மக்கள் நம்பிக்கை ஆகும். அட்சய திருதியை அன்று நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்களில் அட்ஷய திரிதியையும் ஒன்று. இந்த நாள் செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் அட்ஷய திரிதியை மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளால் துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால், அட்ஷய திருதியை நாளில் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். அட்சய திருதியை நாள் மங்களகரமான நாள் என்பதால், இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள், வீடு, சொத்துக்கள், வாகனங்கள் ஆகியவற்றை மக்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், இன்றைக்கு அனைவராலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாது. தங்கம் வாங்க முடியாதவர்கள் வேறு என்ன மாதிரியான பொருட்களை வாங்கி, மகாலட்சுமியின் அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தாண்டு அட்சய திருதியை ஏப்ரல் 29ஆம் தேதியான நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று பிற்பகல் 2.12 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நாளில் மண்பானை, பித்தளை, செம்பு பாத்திரங்கள், புத்தகங்கள், உப்பு, மஞ்சள் ஆகியவற்றை வாங்கலாம். மேலும், இந்நாளில் அரிசி, பருப்பு, கோதுமை போன்றவற்றை தானமாக கொடுத்தால் செல்வம் பெருகும். அதேபோல், அட்சய திருதியை நாளில் மகாலட்சுமிக்கு உரியவை உப்பு மற்றும் மஞ்சள் ஆகும். இவை இரண்டும் வாங்கி, பூஜை செய்து வழிபட்டால் மென்மேலும் நன்மை பயக்கும் என்று கோவில் அர்ச்சகர் தெரிவிக்கின்றனர்.