திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி சுங்கச் சாவடியை கடக்காமல் தப்பித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த 12ஆம் தேதி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்
மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலும் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களிலும் ரூ.80 லட்சம் வரை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதிக்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின்பேரில் திருவண்ணாமலையில் இருந்து கோலார் வரை உள்ள சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் மூலம் ஆய்வு செய்த போது எந்த சுங்கச்சாவடியையும் அவர்கள் கடந்து செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுங்கச்சாவடிக்கு முன்பாக உள்ள கிராமங்கள் வழியாகவே நெடுஞ்சாலைககளை கொள்ளையர்கள் கடதுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தலைவன் ஹாரீப் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தியதில், கோலாரில் கடந்த 20 நாட்களக தங்கியிருந்து கோலாரில் உள்ள ஏடிஎம் ஒன்றையும் கொள்ளைடியத்துள்ளனர். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் 2 நாட்கள் தங்கியிருந்து நோட்டமிட்டுள்ளனர். இந்த கொள்ளையில் கூட்டாளிகள் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். கோலார், குஜராத், ஹரியானா பகுதிகளில் 3 மாவட்ட எஸ்பிக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.