2025 பாதுகாப்பு குறியீட்டின்படி, உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.. இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
உலகளாவிய பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், 2025-ம் ஆண்டின் மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.. இந்த பட்டியலில் ஹைட்டி உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மதிப்பிட்டுள்ளது. ஹைட்டி நாட்டில் 100 இல் 19.0 மதிப்பெண்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.. அதிக ஆயுதம் ஏந்திய கும்பல்கள் நாட்டின் பெரும் பகுதிகளில் தங்கள் பிடியை இறுக்கி வருவதால், அந்த நாட்டில் நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக மாறி உள்ளது.. ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் வன்முறையின் மையமாக மாறியுள்ள போதிலும், கும்பல் வன்முறை அண்டை மாகாணங்களையும் பாதித்து வருகிறது..
ஜூலை 11 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் ஹைட்டியில் உள்ள ஐ.நா. ஒருங்கிணைந்த அலுவலகம் (பினு) ஆகியவற்றின் அறிக்கை, அக்டோபர் 2024 முதல் ஜூன் 2025 வரை 4,860 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது.. அந்த இறப்புகளில் 1,000 க்கும் மேற்பட்டோர் தலைநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் இறந்தனர். மேலும் 620 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், வன்முறை கும்பல்களின் அதிகரிப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும், விரைவில் மக்கள் கடத்தலை அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா. எச்சரிக்கிறது.
கடைசி 10 இடங்களில் உள்ள பிற நாடுகளில் பப்புவா நியூ கினியா (19.3), வெனிசுலா (19.5), ஆப்கானிஸ்தான் (24.8), மற்றும் தென்னாப்பிரிக்கா (25.4) ஆகியவை அடங்கும்.
இந்த நாடுகள் உள்நாட்டு மோதல் மற்றும் பொருளாதார சரிவு, பரவலான குற்றங்கள் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்த்துப் போராடி வருகின்றன. குறிப்பாக தென்னாப்பிரிக்கா, அதிக தாக்குதல், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலை விகிதங்களுடன் தொடர்ந்து போராடி வருகிறது.
இதற்கிடையில், பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான பைரனீஸ் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய மற்றும் அமைதியான நாடான அன்டோரா, பாதுகாப்பான நாடாக பெயரிடப்பட்டுள்ளது. அன்டோரா 84.7 என்ற அதிகபட்ச பாதுகாப்பு மதிப்பெண்ணைப் பெற்றது. இந்த நாட்டின் குறைந்த குற்ற அளவுகள், நிலையான நிர்வாகம் மற்றும் திறமையான காவல் துறை போன்ற காரணங்கள் இந்நாடு முதலிடத்தில் உள்ளது.. பொதுப் பாதுகாப்பில் சமஸ்தானத்தின் நிலையான முதலீடு அதை உலகளவில் ஒரு சிறந்த செயல்திறன் மிக்க நாடாக மாற்றியுள்ளது.
நிலையான கண்காணிப்பு, விழிப்புணர்வு, உள்கட்டமைப்பு, சமூக காவல் மூலம் தங்கள் பாதுகாப்பை அதிகரித்த வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவை முதல் 5 இடங்களுக்குள் உள்ளன.
குறிப்பாக, 2025 தரவரிசை உலகளாவிய பாதுகாப்பு உணர்வுகளில் ஒரு மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது, பாரம்பரிய மேற்கத்திய நாடுகள் இதில் பின்தங்கியுள்ளன. அமெரிக்கா 89வது இடத்தில் (50.8) இருந்தது, அதே நேரத்தில் இங்கிலாந்து 87வது இடத்தில் (51.7) வந்தது.
இந்த பட்டியலில் இந்தியா 66வது இடத்திற்கு முன்னேறி, 55.7 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. நகர்ப்புற காவல் துறையை வலுப்படுத்துதல், கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் விரிவாக்கப்பட்ட பயன்பாடு மற்றும் பொதுப் பாதுகாப்பில் அதிகரித்த சமூக ஈடுபாடு ஆகியவை இந்த ஆண்டு இந்தியாவின் தரவரிசையை முன்னேறியதற்கு முதன்மைக் காரணிகளாகக் கருதப்படுகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த முன்னேற்றம் இந்தியாவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரண்டையும் விட முன்னிலையிலும், பாகிஸ்தானுக்கு (65வது, 56.3) சற்றுப் பின்னாலும் வைத்திருக்கிறது. நமது அண்டை நாடுகளான சீனா 15வது இடத்திலும் (76.0), இலங்கை 59வது, (57.9) இடத்திலும் உள்ளன.. இருப்பினும், வங்கதேசம் 126வது இடத்தில் (38.4) மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
நம்பியோ பாதுகாப்பு குறியீடு என்பது அதிகாரப்பூர்வ குற்றத் தரவுகளை விட, கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டமாக தரவரிசைப்படுத்தப்படுகிறது. இது பகல் மற்றும் இரவில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள், திருட்டு, துன்புறுத்தல் மற்றும் வன்முறைக் குற்றம் குறித்த அவர்களின் கவலைகள் மற்றும் சட்ட அமலாக்கத்தில் அவர்களின் நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மதிப்பிடுகிறது.