வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம்.
கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கவில்லை. அத்துடன் அவை திடமாகவும் இல்லை. இதுமட்டுமல்லாது வெப்பத்தை எதிர்க்கும் திறனும் அவற்றுக்கு மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது 100 கிலோ மீட்டர்கள் முதல் 200 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே அவற்றின் ஆயுட்காலம்.
நவீன கால டயர்கள் அனைத்தும் கடினமாக உள்ளன. நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கின்றன. மிகவும் திடமாகவும் இருக்கின்றன. அத்துடன் வெப்பத்தையும் நன்கு தாங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் அவை வலுவாக உள்ளன. மழையாலும் அவை பாதிக்கப்படுவதில்லை. அத்துடன் சாலைகளில் நமக்கு நல்ல ‘க்ரிப்பை’ அவை வழங்குகின்றன.
கார்பன் பிளாக் (CARBON BLACK) என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால்தான் நமக்கு இவ்வாறான அருமையான டயர்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகதான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதாவது வல்கனைசேஷன் (Vulcanization) செயல்முறையின் போது, சல்பருடன் சேர்த்து வேறு எந்த மெட்டீரியலை காட்டிலும் மலிவான கார்பன் பிளாக் தூய ரப்பருடன் கலக்கப்படும்.
கருப்பு நிற டயர்கள் விரைவாக சேதம் அடையாது. வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் இதற்கு அதிகமாக இருந்தது. வாகனம் ஓட்டும்போது சூடாகும் காரின் பாகங்களிலிருந்து வெப்பத்தை அகற்ற கார்பன் கருப்பு உதவுகிறது. கருப்பு நிறம் சாதாரண தேய்மானத்திலிருந்து ஏற்படும் கீறல்கள் மற்றும் அடையாளங்களை மறைக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கருப்பு நிற டயர்களே சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தான் எல்லா வாகனங்களிலும் கருப்பு நிற டயர்களே பயன்படுத்தப்படுகின்றன.