தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அடுத்த வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (37). இவர் தனது மனைவி உஷா (35) மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9)., உறவுக்கார சிறுமி தேஜா ஸ்ரீ ஆகியோருடன் ஒரே பைக்கில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மாதாக்கோட்டை பைபாஸ் சாலையில் சென்ற போது, கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து நாகூர் சென்ற இன்னோவா கார், அறிவழகன் ஓட்டிச்சென்ற டூ வீலர் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் துறையினர் காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் முகமது ரியாஸ்(31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயிலுக்கு சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read more: மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைகிறார் EX எம்.எல்.ஏ நட்ராஜ்..!!