குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குரூப் 2 தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம், இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வர்களுக்கு அனுப்பப்படும்.
இதில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான இரண்டாம் கட்ட கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!