தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (TANGEDCO) உள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதியாக, தேசிய தொழிற்பயிற்சி குழுமம் (NCVT) வழங்கும் தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தச் சான்றிதழ் மின்பணியாளர் (Electrician), கம்பியாள் (Wireman) அல்லது மின்னியல் தொழிற்பிரிவு (Electrical Trade under Centre of Excellence Scheme) போன்ற பிரிவுகளில் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 1,794 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவில் அதிகபட்ச வயது 32 ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC/MBC) 34 வயது வரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு (SC/ST) 37 வயது வரை வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம்: இந்தப் பணியிடத்திற்கான சம்பள நிலை ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை இருக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது: தாள்-Iல் தமிழ் மொழி, பொது அறிவு மற்றும் திறனறிவு தொடர்பான 100 கேள்விகள் இடம்பெறும். தாள்-IIல் தொழிற்பயிற்சி பாடத்திலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in
என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அக்டோபர் 2ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.