ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (2025 டிசம்பர் 31) நிறைவடைகிறது. மத்திய வருமான வரித்துறை ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இன்னும் தங்களது கார்டுகளை இணைக்காதவர்களுக்கு நாளை முதல் பல நிதி நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த இணைப்பை மேற்கொள்ளத் தவறினால், உங்கள் பான் கார்டு முழுமையாக செயலற்றதாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு செயலற்றதாக மாறினால், உங்களால் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய முடியாது என்பதோடு, வரவேண்டிய வரி ரீபண்ட் தொகையையும் பெற முடியாது. வங்கிகளில் புதிய கணக்கு தொடங்குவது, டிமேட் கணக்குகள் (Demat Account) மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
குறிப்பாக, ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது 10,000 ரூபாய்க்கு மேல் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்யவோ தடை விதிக்கப்படும். இதுமட்டுமின்றி, பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் மானியங்களைப் பெறுவதிலும் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும். பழைய கார்டு தொலைந்துபோனால், ஆதார் இணைப்பு இல்லாமல் புதிய கார்டு பெறுவது சாத்தியமற்றது என்பதால், இப்போதே இதனை சரிசெய்வது அவசியமாகும்.
ஆன்லைனில் இணைப்பது எப்படி..?
இந்த இணைப்பை மேற்கொள்ளப் பொதுமக்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ‘ஈ-பைலிங்’ (e-filing) இணையதளத்தைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்தும், புதிய பயனர்கள் முறையாகப் பதிவு செய்தும் தங்களது கணக்கிற்குள் நுழைய வேண்டும். அதில் ‘My Profile’ பகுதியில் உள்ள ‘Link Aadhaar’ என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளீடு செய்த பிறகு, ‘e-pay tax’ மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) மற்றும் பணம் செலுத்தும் வகையில் ‘Other Receipts’ என்பதை தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட தொகையை வங்கியின் இணையதளம் வழியாக செலுத்தலாம்.
பணம் செலுத்திய பிறகு, தானாகவே ஈ-பைலிங் தளம் உங்களை இணைப்பை உறுதி செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே உங்களது பான்-ஆதார் இணைப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததற்கான தகவல் திரையில் தோன்றும். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்கவும், நிதிப் பரிவர்த்தனைகள் முடங்காமல் இருக்கவும் இப்போதே இந்த செயல்பாட்டை முடிப்பது நல்லது.
Read More : இனிப்புகளில் துணிகளுக்குப் போடும் சாயம் கலப்பு..!! மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும்..!! மருத்துவ உலகமே ஷாக்..!!



