ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் சில படங்களே மக்களின் மனதை கவர்கின்றன. ஒரு படத்தை அந்த அளவுக்கு உயர்த்துவதில் மிகப் பெரிய பங்கை வகிப்பவர்கள் இயக்குநர்கள். இயக்குனர்கள் தனித்துவமான கதை சொல்லும் முறை, சினிமா மொழியை கையாளும் திறன் மற்றும் அணுகுமுறைகள் இவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. தங்கள் திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை வழங்குவதால், இவர்களின் சம்பளமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் 5 இயக்குநர்கள் குறித்து பார்க்கலாம்..
எஸ். எஸ். ராஜமௌலி
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி தற்போது பான் இந்தியா இயக்குனராக வலம் வருகிறார்.. இந்திய சினிமாவின் மிக அதிகம் சம்பளம் பெறும் இயக்குநர். அவர் இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது “வராணசி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
IMDb தகவலின்படி, ராஜமௌலி ஒரு படத்துக்கு சுமார் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது..
சந்திப் ரெட்டி வங்கா
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல், திரைப்படம் வெளியானதும், இந்தியாவில் பல படங்கள் உருவாக்கிய சாதனைகளை முறியடித்தது. தீவிரமான உணர்வுகள், மனோவியல் கூறுகள், சிக்கலான கதாபாத்திரங்கள் உடன் கூடிய படங்களை உருவாக்குவதில் சந்தீப் ரெட்டி வங்கா பிரபலமானவர். அவரின் முக்கியமான படங்களில் கபீர் சிங் ஒன்று. இந்த படம் இந்தியாவில் ரூ. 300 கோடி வசூல் செய்தது.
அதேபோல், அனிமல் உலகளவில் ரூ. 900.5 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. IMDb தகவலின்படி, சந்தீப் ரெட்டி வங்கா ஒரு படத்துக்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
பிரஷாந்த் நீல் (Prashanth Neel)
சினிமா துறையில் தனிச்சுவை கொண்ட முன்னணி இயக்குநராக பிரஷாந்த் நீல் கருதப்படுகிறார். அவர் முக்கியமாக கன்னட மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் பணியாற்றுகிறார்.
அவரின் வெற்றிப் படங்களில் சலார், கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 போன்றவை அடங்கும்.
பிரஷாந்த் நீல் தனது இயக்கத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். அதில் பிலிம்பேர் விருதுகள், South Indian International Movie Awards (SIIMA) போன்றவை இடம்பெறும். IMDb தகவலின்படி, பிரஷாந்த் நீல் ஒரு படத்துக்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
ராஜ்குமார் ஹிரானி (Rajkumar Hirani)
PK, Munnabhai MBBS, 3 Idiots, Sanju போன்ற பல ஹிட் படங்களை உருவாக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. அவரது படங்கள் வணிகரீதியாகவும் விமர்சகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றவை. அவர் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய கிஷோர் குமார் விருது (National Kishore Kumar Award) பெற்றார். இந்த விருது மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத் துறை சார்பில் கந்த்வாவில் வழங்கப்பட்டது. IMDb தகவலின்படி, ராஜ்குமார் ஹிரானி ஒரு படத்துக்கு ரூ. 80 கோடி சம்பளம் பெறுகிறார்.
சுகுமார் (Sukumar)
சுகுமார் ஒரு திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளராக தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். அவர் இந்திய சினிமா வரலாற்றில் மூன்றாவது அதிக வசூல் செய்த இயக்குநர் என்ற பெருமையை பெற்றவர். மேலும், இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். IMDb தகவலின்படி, சுகுமார் ஒரு படத்துக்கு ரூ. 75 கோடி சம்பளம் பெறுகிறார்.
இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒரு தமிழ் இயக்குனர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..



