இந்தியாவில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், மேனேஜரின் மோசமான அணுகுமுறையால் மனஅழுத்தத்திற்குள் தள்ளப்பட்டு, இறுதியில் வேலை இழந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.
அந்த ஊழியர் ரெட்டிட் (Reddit) தளத்தில் பகிர்ந்த பதிவின்படி, அவர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் சிறந்த சம்பளம் காரணமாக அவர் புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாகவே இருந்தது. இந்திய மேனேஜரின் கீழ் பணிபுரிந்த அவர், தன் திறமையால் அவரை கவர்ந்தார். முக்கியமான பிராஜக்ட்களில் கூடுதல் நேரம் வேலை செய்ததற்காக பாராட்டுகளும், 10% ஊதிய உயர்வும் கிடைத்தது.
ஆனால் சில மாதங்களில் அந்த மேனேஜரின் நடத்தை முழுமையாக மாறிவிட்டது. சிறிய தவறுகளுக்கே பெரிய குற்றச்சாட்டுகள், புதிய முயற்சிகளை கேலி செய்தல், ஊதியம் குறித்த விமர்சனங்கள், ஓவர்டைம் ஊதியம் நிறுத்துதல் என டாக்சிக் சூழல் உருவாகியது. தொடர்ந்து நடந்த துன்புறுத்தலால், எனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மூன்று மாதங்கள் அதை தாங்கியபின், ஒரு நாள் திடீரென்று ‘பெர்பாமன்ஸ் சரியில்லை’ எனச் சொல்லி, என்னை டிஸ்மிஸ் செய்தனர் எனவும் கூறியுள்ளார். நோட்டீஸ் பிரியட் முழுவதும் நம்பிக்கையுடன் பணியாற்றியும், மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டுகள் கிடைத்தபோதும், வேலை இழப்பிலிருந்து தப்ப முடியவில்லை. இதனால் அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்து, புதிய வேலை தேடத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அதே நிறுவனத்தின் HR அதிகாரி அவரை தொடர்பு கொண்டு, மீண்டும் பணிக்கு வருமாறு கேட்டுள்ளார். மேலும், ஒரு சீனியர் மேனேஜரும் “இப்போது நிறுவனத்தின் வேலைச் சூழல் மாறிவிட்டது” என உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்த இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.