வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், எஃகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா அரசுபதிலடி வரிகளை விதித்துள்ளது.
இந்த வர்த்தக மோதலில் கனடா தனது இலக்காக 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகளைக் குறிவைத்துள்ளது. இந்த வரி விதிப்புப் பட்டியல் தொழில்துறைப் பொருட்களைத் தாண்டி, கடல் உணவுகள், சீஸ், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் டாய்லெட் பேப்பர் போன்ற அன்றாட நுகர்வுப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. இதில் சில பொருட்களுக்கு 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக உறவுகளில் ஒன்றைக் குலைக்கும் வகையில் இந்த பதற்றம் உருவெடுத்துள்ளது.
மேலும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் வார இறுதியில் 50 சதவீத வரிகளை விதித்ததை அடுத்து, கனடா இந்த பதிலடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கனடாவை அடக்க அமெரிக்கா முயற்சி:
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள், நமது முக்கிய தொழில்களை “அழிக்க” அமெரிக்கர்கள் விரும்புவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
மறுபுறம், திங்கட்கிழமை அன்று கனடா தலைவர்களை கட்டுப்பாட்டுக்குள் வரவும் அல்லது தற்போதைய வரிகளை விட “மிகவும் மோசமான” விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்து மோதலைத் தீவிரப்படுத்தினார். மேலும் கனடிய வாகனங்கள், வாகனத் உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீது புதிய 50 சதவீத வரிகளை விதிப்பதாகவும் அவர் மிரட்டினார்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை நேற்று மற்றொரு ஆத்திரமூட்டும் அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ஒன்ராறியோ மாகாணத்தின் பிரீமியர் டக் ஃபோர்டுடனான மோதல் காரணமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) “அமெரிக்க ஏரி” (Lake America) என்று மறுபெயரிடுவது குறித்து அமெரிக்கா “தீவிரமாக” பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என்று டிரம்ப் நிர்வாக உத்தரவு மூலம் மறுபெயரிட்டதை இந்த நடவடிக்கை நினைவூட்டும் வகையில் உள்ளது.
செப்டம்பர் 8 முதல் வரிகள் அமலுக்கு வரும்
இந்த வரிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 15 சதவீதம், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதம் என்ற விகிதங்களில் அமலுக்கு வரும். கூழ் மற்றும் காகிதம் (Pulp and paper) மற்றும் மின்னணுவியல் போன்ற 700-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதே வரி விகிதத்தைக் கனடாவும் அமல்படுத்தியுள்ளது.
பல அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகள் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாகும். இந்த புதிய நடவடிக்கைகளின் பெரும்பகுதி எஃகு மற்றும் அலுமினியத்தைப் பாதிக்கிறது. வருவாயை ஈட்டுவது நோக்கமல்ல, மாறாக கனடா நிறுவனங்களைப் பாதுகாப்பதும் அமெரிக்க இறக்குமதியைக் குறைப்பதும்தான் இலக்கு என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வளர்ச்சிகளுக்கு மத்தியில், கனடா 25 சதவீத வரியை விதித்ததிலிருந்து அமெரிக்க எஃகு இறக்குமதி ஏற்கனவே 30 சதவீதம் குறைந்துள்ளதுடன், புதிய 50 சதவீத விகிதம் அவற்றை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில எஃகு மற்றும் அலுமினிய தயாரிப்புகள், தளவாடங்கள் மற்றும் ஆடைகள் ஆகியவை 50 சதவீத வரிகளை எதிர்கொள்ளும் பொருட்களில் அடங்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள், மீன் மற்றும் கடல் உணவுகள் மற்றும் சில எஃகு மற்றும் அலுமினிய வழிப்பொருட்கள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும். அமெரிக்க வாகனங்கள் மீது கனடா ஏற்கனவே விதித்துள்ள எதிர் வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும், இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு 7.5 பில்லியன் கனடிய டாலர்கள் (5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான ஆதரவுத் தொகுப்பைக் கனடா அறிவித்துள்ளது.



