ஆவண பதிவு தொடர்பாக கடந்த 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000 க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு
வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாகவே உள்ளது. இதில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவினை மேற்கோள்காட்டி பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அது தொடர்பான ஆவணங்களின் விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் அனைத்து சார்பதிவாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அவ்வாறு தெரிவிக்காமல் அல்லது தாமதப்படுத்தும் பட்சத்தில் உத்தரவை மீறும் சார்பதிவாளர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆவண பதிவு தொடர்பாக கடந்த 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000 க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.



