திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில், கலந்துகொண்ட பலரும் கல்விக் கொள்கைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில், அரசு பள்ளி மாணவர் ஒருவர், இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் போது, “நாம் கல்விக்கு கொடுக்கின்ற அளவு முக்கியத்துவத்தை விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
பல ஆசிரியர்கள் விளையாட்டு பீரியடை கடன் வாங்கி பாடம் எடுத்து படிக்க சொல்கின்றனர். இப்படி செய்யக்கூடாது. விளையாட்டு பீரியடில் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு தரமானதாக கொடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
இதை கேட்ட ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் அனைவருமே கைத்தட்டி அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இந்த மாணவர் பேசுவதை அங்கிருந்த அதிகாரி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவானது, வைரலாகி மாணவர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. இதை கண்ட பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.