மத்திய அரசின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் மற்றும் செயலாளர் சாத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் லாரிகள் ஓடாது என அறிவித்துள்ளனர்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025 நவம்பர் 11-ம் தேதி, இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்திற்கும் தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி அதிரடி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் வாயிலாகப் பதிவு காலத்திற்கு ஏற்ப இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் இதர நெருக்கடிகளில் சிக்கியுள்ள லாரி உரிமையாளர்களுக்கு, இந்தத் திடீர் கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. “கடந்த 90 நாட்களாகப் பொறுமை காத்தும், எங்களது கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை. இந்தக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதா என்பதே சந்தேகமாக உள்ளது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, முதற்கட்டமாக நாளை முதல் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம் தொடங்குகிறது. மேலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாமக்கல்லில் நடைபெற உள்ள சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் எப்போது முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என்பது குறித்த இறுதி முடிவும், தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இப்போராட்டம் தீவிரமடைந்தால் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



