அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியுள்ளது
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் உள்ள பல நாடுகளுக்கு கடும் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பூமிக்கடியில் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டது.
இதன் தாக்கமாக ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி அலைகள் 3–4 மீட்டர் உயரம் வரை பதிவாகியுள்ளன. ஜப்பானின் ஹனசாகி துறைமுகம், ஹொக்கைடோ, மற்றும் பசிபிக் கடலோர ஹவாய் பகுதிகள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளன. மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலாஸ்கா மாநிலங்களுக்கு, மேலும் ஜப்பானின் பசிபிக் கடற்கரை நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் கடந்த பல வருடங்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று ரஷ்யா அவசர நிலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியுள்ளது. பசிபிக் கடற்கரை பகுதியில் வசிக்கும் இந்தியர்கள், அவசர எச்சரிக்கைகளை பின்பற்றி, உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும், தேவையான உதவிக்கு +1-415-483-6629 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இது போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு தயாராக இருக்கவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பிக்கையுடன் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: #Flash : மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.480 உயர்வு.. நகைப்பிரியர்கள் ஷாக்..