ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கடலுக்கு 12 மைல் ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து 89 மைல் கிழக்கே ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, அருகிலுள்ள பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அந்தக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட செய்தியில், சில ரஷ்ய கடற்கரைகளில் 1 மீட்டர் வரை உயரமுடைய சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹவாய் மற்றும் ஜப்பான் கடற்கரைகள் குறித்தும் ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் அச்சுறுத்தல் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவை ரத்து செய்யப்பட்டன. அச்சுறுத்தலுக்குள்ள பகுதிகளில் உள்ள மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், கடலோர மக்களுக்கு செய்தி தெரிவித்து, அவசர நிலை வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என சுனாமி மையம் வலியுறுத்தியுள்ளது.
“மக்கள் விழிப்புடன் இருப்பதும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதும் அவசியம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கம் நிகழும் ஆரம்பக் கட்டங்களில் அதன் துல்லியமான அளவீடுகள் மாறுபடக்கூடியது என்பதால், மேலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Read more: மகளிர் உரிமை தொகை.. இவர்களுக்கெல்லாம் ரூ.1000 பணம் கிடையாது..!! – ஷாக் நியூஸ்