கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது..
தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்ட அவர் கரூர் சம்பவத்திற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் சினிமா டயலாக் பேசியதும் விமர்சிக்கப்பட்டது.. இதை தொடர்ந்து தவெக தரப்பிலோ அல்லது விஜய் தரப்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.. இதனிடையே கரூர் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது நீதி வெல்லும் என்று விஜய் பதிவிட்டிருந்தார்..
இந்த நிலையில் நேற்று கரூரில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து ஆறுதல் கூறிய நிலையில் இன்று திமுக அரசை கண்டித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் “ தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி..” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
கரூர் சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் கூறினார்.. தன்னை பார்க்க வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை வரவழைத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்..
விஜய்யின் தவெக கட்சி முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்துள்ளார்.
தனது வழிகாட்டுதலின் படி இயங்கும் இந்த புதிய நிர்வாக குழுவிற்கு கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.. விஜய் அமைத்த இந்த குழுவில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட செயலாளர்களுடன் கூடிய குழுவை விஜய் அமைத்துள்ளார்..



