கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார். சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்ட அவர் கரூர் சம்பவத்திற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் சினிமா டயலாக் பேசியதும் விமர்சிக்கப்பட்டது. இதனிடையே கரூர் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது நீதி வெல்லும் என்று விஜய் பதிவிட்டிருந்தார்.
கரூர் சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் கூறினார். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த வகையில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்தார்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் உருவாக்கப்பட்ட தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இணைந்துள்ளனர். உளவு பிரிவு உட்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கள் சபியுல்யா, சிவலிங்கம், ADSP அசோகன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.



