அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி , இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை வாங்குகிறது, இதன் காரணமாகதான் இந்தியாவின் டீசல் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கான முடிவை உக்ரைன் எடுப்பதாக உக்ரைனிய எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர் கூறுகிறது. ரஷ்யா, உக்ரைன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் குறிவைக்கிறது என்று என்கோர் கூறினார். அதன்படி, ரஷ்ய கூறுகளைக் கண்டறியும் வகையில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து டீசல் சரக்குகளையும் சரிபார்க்க உக்ரைன் பாதுகாப்பு நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு ஆலோசனை நிறுவனமான A-95, இந்த கோடையில் ஒரு பெரிய உக்ரைன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்ததாகவும், இதனால் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து டீசல் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தது. பழைய சோவியத் தரநிலைகளை பூர்த்தி செய்ததால் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தியாவிலிருந்து சிறிது டீசலை வாங்கியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உக்ரைன் இந்தியாவிலிருந்து 119,000 டன் டீசலை வாங்கியதாகவும், இது அதன் மொத்த டீசல் இறக்குமதியில் 18 சதவீதமாகும் என்றும் என்கோர் கூறியுள்ளது. 2022 இல் போர் தொடங்குவதற்கு முன்பு, உக்ரைன் தனது உள்நாட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து டீசல் வாங்கியது. இந்த ஆண்டின் முதல் பாதியில் டீசல் இறக்குமதி கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைந்து 2.74 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்ததாக ஏ-95 கன்சல்டன்சி தெரிவித்துள்ளது .
மத்திய கிழக்கை விட இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகிறது, ஏனெனில் அது மத்திய கிழக்கை விட மலிவானது. இரண்டு இடங்களுக்கும் இடையே விலையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.