மரணம் என்பது ஒருவரின் வாழ்க்கையின் முடிவாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ராஜீவ் பரிதி, மரணம் என்பது உடலின் முடிவு தான் ஆனால் ஆன்மாவின் முடிவு அல்ல என்று சொல்கிறார்.
2008-ஆம் ஆண்டு, புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, அவரின் இதயத் துடிப்பு சில நிமிடங்கள் நின்றுவிட்டது. அந்த நேரத்தில் அவர் அனுபவித்தது, அவரது வாழ்வையே முழுமையாக மாற்றியதாக கூறப்படுகிறது. அவர் கூறியதாவது: “எரியும் சாலையில், புகையால் மூச்சுத் திணறியபடி, சதையின் எரிவாசனை என்னை குமட்ட வைத்தது. நான் நரகத்தின் வாசலில் இருப்பதை உணர்ந்தேன்” என்றார்.
இந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர் பேக்கர்ஸ்ஃபீல்ட் இதய மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பையும், சொகுசு கார்கள், வீடுகள் போன்ற செல்வங்களையும் விட்டு விலகினார். வாழ்க்கையை வேறு கோணத்தில் காணத் தொடங்கினார். தன் அனுபவத்தை “Dying to Wake Up: A Doctor’s Voyage into the Afterlife and the Wisdom he brought Back” என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.
ஆனால் அவரது நண்பர்களும், சக ஊழியர்களும் இதனை நம்பவில்லை. இருந்தாலும் அவர், “நான் என் ஆன்மாவின் நோக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதையே தெளிவாகக் கண்டேன்” என்கிறார். அறிவியல் பார்வையில், இத்தகைய மரணத்திற்கு அருகிலான அனுபவங்கள் (Near Death Experiences – NDEs), இதயநோய் அல்லது மூளைக்குழப்பங்கள் காரணமாக உருவாகும் ‘மன-உடல் மாயை’ (hallucination) எனக் கருதப்படுகின்றன. ஆனாலும் பலர் இதை மறு வாழ்க்கையின் சான்று என நம்புகிறார்கள்.