இந்தியா தேசியப் பாடலான “வந்தே மாதரம்” 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேரு தன்னிச்சையாக துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி, பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தை வெளியிட்டார் என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு..
பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், தனது எக்ஸ் பக்கத்தில் “ 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்தது “வரலாற்று பாவமும் தவறும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் “1937 செப்டம்பர் 1 ஆம் தேதியிட்ட கடிதத்தில் நேரு, வந்தே மாதரத்தில் காணப்படும் தெய்வம் குறித்த எந்தச் சொற்களையும் தேவியுடன் தொடர்புபடுத்துவது அபத்தம் என எழுதியுள்ளார்,” என்று பதிவிட்டு அவர் அந்தக் கடிதத்தின் சில பகுதிகளையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘முழு மூல’ வடிவிலான பாடலை வெளியிட விரும்பினார். ஆனால் நேரு, வந்தே மாதரம் தேசியப் பாடலாக பொருத்தமில்லை என நினைத்தார்,” என்று தெரிவித்தார்..
மேலும் “1937 அக்டோபர் 20 அன்று நேரு, நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில், வந்தே மாதரத்தின் பின்னணி முஸ்லிம்களை பாதிக்கக்கூடும் என கூறியுள்ளார். இதனை எதிர்த்து எழுந்துள்ள எதிர்ப்பில் சில உண்மை இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,” என்று கேசவன் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் அனைத்தும், பிரதமர் நரேந்திர மோடி நியூடெல்லியில் உள்ள இந்திரா காந்தி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் “வந்தே மாதரம் 150 ஆண்டுகள்” விழாவில் பேசவிருக்கும் நேரத்திற்கு முன்பாகவே வந்துள்ளன.
மேலும் பேசிய கேசவன் “வந்தே மாதரம் எந்த மதத்திற்கோ அல்லது மொழிக்கோ சொந்தமானது அல்ல. ஆனால் நேருவின் தலைமையிலான காங்கிரஸ், மத அடிப்படையில் பாடலைச் சுருக்கி, துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி வரலாற்று தவறு செய்தது,” என்றார்.
மேலும் “நேருவின் இந்த ‘இந்து விரோதி’ மனப்பான்மை இன்று ராகுல் காந்தியிலும் ஒலிக்கிறது. அவர் சமீபத்தில் சாத்துப் பூஜையை நாடகம் என கூறி, கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்ச்சிகளை புண்படுத்தினார்,” என்றார். இது தொடர்பாக, ராகுல் காந்தி சமீபத்தில் சாத்துப் பூஜா விழாவில் பிரதமர் மோடி தனி குளம் அமைத்து நீராடியதை “நாடகம்” என விமர்சித்திருந்தார்.
வந்தே மாதரம் பாடல் 19ஆம் நூற்றாண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியது. அது முதன்முதலில் ‘பங்கதர்சன்’ என்ற இலக்கிய இதழில், அவரது நாவலான “ஆனந்தமத்” (1882) இல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது..



