ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் என்பது, வாழ்வின் அனைத்து துன்பங்களையும் களைந்து அருள் புரியும் புகழ்பெற்ற விநாயகர் திருத்தலமாகும். சென்னையிலிருந்து 175 கி.மீ தொலைவிலும், திருப்பதியில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் புண்ணிய தலம் இதுவே.
கம்பீரமாக எழுந்திருக்கும் வெண்ணிற ராஜகோபுரம் தூரத்திலிருந்தே பக்தர்களை ஈர்க்கிறது. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் சுயம்பு மூர்த்தி. புராண கதைகளின்படி, விஹாரபுரியைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளி சகோதரர்கள், தங்களின் நிலத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் வேலையை தொடங்கினர். ஒருவருக்குப் பேச முடியாது, இன்னொருவருக்கு காது கேட்காது, மற்றவரோ பார்வைக் குறைபாடு உள்ளவர்.
அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் அரும்பாடு பட்டு பயிர் செய்து வந்தனர். ஒருமுறை, நிலத்துக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் நிறைக்க நினைத்தனர். ஆனால், கிணற்றில் நீரே இல்லை. மூவரில் ஒருவர், மண்வெட்டி, கடைப்பாறையுடன் கிணற்றில் இறங்கி, அதை ஆழப்படுத்தும் வேலையைத் தொடங்கினார்.
மண்வெட்டி ஏதோ ஒரு கடினமான பாறையில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அந்தச் சிலையை கண்டவுடனேயே மூவரின் குறைகளும் நீங்கிப் போனது. அதனைப் பார்த்த கிராம மக்கள், அந்த மூர்த்தி தெய்வீக சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து வணங்கத் தொடங்கினர். அந்த விநாயகரை வெளியில் எடுக்க அந்த ஊர் மக்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனால் ரத்தத்தை நிறுத்த மக்கள் இளநீரால் கிணற்றிலேயே அபிஷேகம் செய்தனர்.
அந்த இளநீர் அருகில் உள்ள காணியில் பாய்ந்தது. எனவே அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல, அந்த கிணற்றுக்குள்ளேயே விநாயகரை சுற்றி சன்னதி எழுப்பினர். தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு அங்கு கோயில் உருவானது. சோழரும், விஜயநகர மன்னர்களும் இத்தலத்திற்கு பல திருப்பணிகளைச் செய்தனர்.
காணிப்பாக்கம் விநாயகர் சிலை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே போகிறது என்ற அபூர்வ தன்மையால் பரவலாக அறியப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர் அளித்த வெள்ளிக் கவசம், சிலை வளர்ந்ததால் இன்று பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலின் தனித்துவங்கள்:
பிரசாதம்: இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படுவது, ஒரு சிறு அளவு திவ்ய தீர்த்தம். ஆனால், அதன் மகிமை அளப்பரியது.
சத்தியப் பிரமாணம்: காணிப்பாக்க விநாயகர் முன் நின்று சத்தியம் செய்தால், தவறானவர்களுக்கு 90 நாட்களுக்குள் தண்டனை நிச்சயம் என்ற நம்பிக்கை பரவி உள்ளது. இதனால் இங்கு “சத்தியப் பிரமாணம்” பிரபலமாக உள்ளது.
பிரார்த்தனை, பரிகாரம்: திருமண தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க, நாக தோஷ நிவர்த்தி, துலாபாரம், அன்னப்ராசனம் போன்ற பல வேண்டுதல்கள் நிறைவேறும் இடமாகக் காணிப்பாக்கம் விளங்குகிறது.
சமீபத்தில் கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு அழகுடன் மிளிர்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளம், விநாயகர் பூங்கா, மணிகண்டேஸ்வரர் சன்னதி, பெருமாள் கோவில் ஆகியவை பக்தர்களின் உள்ளங்களை கவர்கின்றன. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தலம், நல்லவருக்கு நல்லவராகவும், கெட்டவருக்கு கடும் பாடம் புகட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். ஆதலால், அவரை தரிசிப்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.