குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என கூறியிருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக கூறியுள்ளார். தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.