தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களான லியோ, கோட் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் ஏற்கனவே கமிட்டான படத்தை முடித்து விட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில், விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பாபி தியோல், நரேன், பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 20க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் அழைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் உள்ளன. ரஜினி – கமல் வருவது சாத்தியமில்லை எனினும், சூர்யா நிச்சயமாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், தனுஷ், சிம்பு ஆகியோர் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய்யின் கடைசி படத்திற்காக இப்படியான நட்சத்திரங்கள் ஒன்றுகூடும் விழா நடந்தால், அது இந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய நிகழ்வாகப் போவதாகவும், ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைத் தரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.