சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



