தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார்.
அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டிய விஜய், மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயுத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து ‘மக்கள் பாதுகாப்புப் படை’யை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சியும் அளித்தார். இந்நிலையில், சேலத்தில் இருந்து டிச.4-ம் தேதி முதல் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்க விஜய் முடிவு செய்தார். ஆனால் திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்புக் காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர். இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இது குறித்து தவெக வெளியிட்ட அறிக்கையில்; தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத்தினரும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



