‘மாஸ்டர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இப்படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். லியோ படத்தின் எதிர்பார்ப்பு இருந்து வந்த அதே வேளையில், விஜய் – வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும், தற்போதைக்கு லியோ படத்தின் மீது தான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதால், தளபதி 68 குறித்த முதல் அறிவிப்போடு அதுகுறித்த தகவல்களை வெளியிடலாம் படக்குழு உள்ளது.

அந்த வகையில், இன்று ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் முதல் பாடலான அல்டர் “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
நா ரெடி புரோமோ வீடியோவையும் அவர் வெளியிட்டு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் எனவும் லோகோஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை ஷேர் செய்து நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக லியோ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ப்ரோமாவுக்கு படக்குழு வெளியிட்ட வீடியோவில், அனிருத்தின் பின்னணி இசை மிரட்டியிருந்தது என ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, முதல் பாடல் விஜய் ரசிகர்களுக்கு அனிருத்தின் வேற லெவல் விருந்தாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.