கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியதோடு, பாஜக–தவெக நெருக்கம் பற்றிய பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த துயர சம்பவத்துக்குப் பிறகு, பாஜக விஜய்க்கு நேரடியாக ஆதரவு அளித்து வருகிறது.
விஜய் கடந்தகாலத்தில் பாஜகவை தனது கொள்கை எதிரியாகவே சுட்டிக்காட்டி வந்த போதிலும், பாஜக திடீரென தவெகவுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளானது. அதிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல மத்திய பாஜக தலைவர்கள் கரூர் நேரில் வந்து விசாரணை நடத்தியது, இந்தச் சூழலில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றது கவனம் ஈர்த்தது.
அங்கு சில முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம், “கரூர் விவகாரம் மூலமாக விஜய்யை நெருங்க முடியும்” என பாஜக கணித்திருந்தது. ஆனால், அவ்விதமான முயற்சி வெற்றியடையவில்லை. விஜய், பாஜகவுடன் எந்தவித கூட்டணியிலும் அல்லது நெருக்கத்திலும் ஈடுபட விரும்பவில்லை என நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
2 நாட்களுக்கு முன்பாக அண்ணாமலை, நாங்கள் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் அதிகாரிகளா என்று கேள்வி எழுப்பி கொந்தளித்தார். இதன் மூலமாக பாஜகவின் பிடிக்கு விஜய் கட்டுப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை பாஜக கைவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் டிசம்பர் மாதம் இறுதி வரை பாஜக தரப்பில் சில முயற்சிகளை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.