2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், தற்போது முழுநேர அரசியலுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதியாகின்றன. இந்நிலையில், வருகிற ஜூலை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு தலைமையேற்க உள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில செயற்குழுக் கூட்டத்தில் “கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், மக்களுடன் தொடர் சந்திப்புகள், மாவட்டக் கட்டமைப்புகள், மற்றும் கட்சித் தளவாடத்தை வலுப்படுத்தும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, தவெக கட்சி சின்னம் கிடைக்காத நிலையில், மக்களிடம் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்யும் முடிவை சில காலம் தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி சின்னம் கிடைத்த பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களோடு நேரடியாக சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், பொதுமக்களின் பிரச்சனைகளை எடுத்து போராட்டங்கள் நடத்த, மாவட்டங்களின் நிலை நிர்வாகிகள், சார்பு அணிகள், மற்றும் பூத் கமிட்டிகள் ஆகியவையுடன் செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. சமீபத்தில் கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களிலும் மாநாடுகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், ஜூலை 4ம் தேதி நடைபெற உள்ள மாநிலச் செயற்குழுக் கூட்டம், தவெக கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தளமாக இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் கட்சி பரப்புரையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நிர்வாகிகள், சிறப்புக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read more: ஜூலை 17-ம் தேதி பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு.. தரவரிசைப் பட்டியல் வெளியீடு..