நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். ஆனால் சமீப காலமாகவே தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் சீமான் கலந்து கொண்டார். அப்போது நாதக ஆதரவாளர் ஒருவர் சீமானிடம், நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளாகிவிட்டது.. இதுவரை என்ன செய்தீர்கள்.. மாற்று திறனாளிகளுக்கு என்ன செய்தீங்க..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சீமான் கூறியதாவது, “மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு நாதக ஆட்சி அமைந்ததும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். நகருக்குள் சிற்றுந்துகள் இயக்கப்படும்; நெடுந்தூரப் பயணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில் ஓட்டுநர் மட்டுமே இருப்பார், நடத்துநர் நிலையத்திலிருந்தே டிக்கெட் வழங்குவார். புதிய நடத்துநர் பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும்.” என்றார்.
மேலும் தவெகவுக்கு தான் எங்கள் ஓட்டு என சொல்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “அப்படி சொல்பவர்களுக்கு சுத்தமாவே பார்வை இல்லை என்றுதான் சொல்ல முடியும். நடிகனை நேசிக்கிறவன் நமக்கான ஆள் அல்ல, நாட்டை நேசிக்கிறவனே நமக்கான ஆள்,” என்று பதில் அளித்தார்.



