பிகாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு கிடந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது. பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் நேரடி ஒலிபரப்பு மூலம் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 3.75 கோடியாகும். இந்நிலையில் பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரம் விவி பாட் ஒப்புகைச்சீட்டுகள் சிதறிக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: சம்பவ இடத்துக்கு சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பிஹார் தேர்தலுக்கு முன், மாதிரி வாக்குப் பதிவு நடத்தி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் விவிபாட் சீட்டுகளே அங்கு கிடந்துள்ளன. எனவே பிஹார் தேர்தல் நடைமுறையில் எவ்விதத்திலும் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை. இதுகுறித்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அலட்சியமாக செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரி (ஏஆர்ஓ) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



