சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அவுன்ஸுக்கு 3,683 அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்க விலையை விட சுமார் 43% அதிகம். இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிடுவது, முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கம் பக்கம் ஈர்த்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு மோதல்கள், அமெரிக்கா-சீனா மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பிரச்சனைகள் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்களும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருத வழிவகுக்கின்றன. குறிப்பாக, ஆசிய நாடுகளில் உள்ள பல மத்திய வங்கிகள், அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக அதிக தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், இந்த வேகமான விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட உச்ச விலைக்குப் பிறகு, தங்கம் ஒரு பெரிய சரிவை கண்டது. அதேபோல, இப்போதும் ஒரு குறுகிய காலச் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிபுணர்களின் கணிப்பின்படி, தங்கம் அடுத்த சில மாதங்களில் 5-6% வரை சரியலாம். இந்தச் சரிவு, சந்தையில் நுழையக் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த சரிவுக்குப் பின், தங்கம் மீண்டும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வட்டி விகித குறைப்பு மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாக 2026இல் தங்கம் 4,000 முதல் 4,200 டாலர்கள் வரை புதிய உச்சத்தை அடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை சுமார் 3,800 டாலர்களை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கம் விலை குறையும் நேரத்தில் முதலீடு செய்வது, எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.