நடைப்பயிற்சி என்றால் பலரின் மனதில் முதலில் வருவது அதிகாலை நேரம் தான். அமைதியான சூழல், குளிர்ந்த காற்று, புத்துணர்வு இவை அனைத்தும் அதிகாலை நடைப்பயிற்சியை சிறப்பாக்கும் அம்சங்களாக இருந்தாலும், மாலை நேர நடைப்பயிற்சியும் அதே அளவு, சில சமயம் அதைவிட கூடுதலாக ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பதை பல ஆய்வுகள், நிபுணர்கள் தெளிவாகக் கூறுகின்றனர்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, வேலை நேர கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல் எல்லாம் சேர்ந்து அதிகாலையைப் பயிற்சிக்குத் தகுந்த நேரமாக மாற்றிவிடவில்லை. காலையில் எழுந்தவுடன் அலுவலகத்துக்கான அவசரம், குடும்ப பொறுப்புகள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டிய சூழல் இவை அனைத்தும் அதிகாலை நடைப்பயிற்சியை பலருக்கு சாத்தியமற்ற ஒன்றாக மாற்றுகின்றன. அதன் விளைவாக, மாலை நேரமே பலருக்கு உகந்த நேரமாக மாறி வருகிறது.
மாலை நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் பல வகைகளில் உதவுகிறது. நாள் முழுவதும் மன அழுத்தத்தில் வேலை செய்த உடல், மாலை நேரத்தில் சற்று ஓய்வை நாடுகிறது. அந்த நேரத்தில் செய்யப்படும் நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்ல, இரவு நன்கு தூங்கவும் உதவுகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ள அதிக உடல் எடை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் மாலை நடைப்பயிற்சி ஒரு எளிய, இயற்கையான தீர்வாக விளங்குகிறது.
மாலை நடைப்பயிற்சியின் நன்மைகள்:
* மாலை நேரத்தில் சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வது உடலை தளர்த்துவதோடு, முழு நாளின் சோர்வையும் துடைத்தெறிந்து புத்துணர்ச்சி தருகிறது.
* நாள் முழுவதும் அழுத்தத்திலும் உழைப்பிலும் இருந்த உடலுக்கும், மனதுக்கும் மாலை நடைபயிற்சி ஒரு சிறந்த ஓய்வு தரும். பார்க் அல்லது திறந்த வெளியில் செய்யும் நடை தசைகளையும், நரம்புகளையும் தளர்த்துகிறது.
* தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை நடைப்பயிற்சி ஒரு அற்புதத் தீர்வு. உடல் இலகுவாகி, மனம் அமைதியாகி இரவு நேரத்தில் இயல்பாக நல்ல தூக்கம் கிடைக்கும்.
* இரவு உணவுக்குப் பிறகு மெதுவான நடை, வயிற்றில் சீரான செயல்பாட்டை உருவாக்கி செரிமானத்தை வேகப்படுத்துகிறது.
* நேரம் முழுவதும் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி தவிர்க்க முடியாத பிரச்சினை. மாலை நடை தசை இறுக்கத்தை குறைத்து முதுகுவலியை தணிக்க உதவுகிறது.
* தினசரி நடை உடலை இயங்க வைக்கும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி நெகிழ்வாகவும் வலுவாகவும் மாறும்.
* படிப்படியாக மாலை நடை தசைகளை உறுதியாக்கி, முழு உடலுக்கும் நல்ல வலிமையை வழங்குகிறது.
* தினமும் 30 நிமிட நடைபயிற்சி கூட உடலில் கூடும் கொழுப்பை எரித்து, எடை குறைய மிக உதவும்.
* மாலை நடை மனதின் அழுத்தங்களை வெளியேற்றி, ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி மனச்சாந்தி அளிக்கிறது.
Read more: தேர்வு கிடையாது.. ரூ.1,23,100 சம்பளத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை..! உடனே விண்ணப்பிங்க..



