இன்றைய வேகமான வாழ்க்கை முறை, அதிகமான மன அழுத்தம், சீரற்ற உணவு பழக்கங்கள், உடல் நலனில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி… இவையெல்லாம் நம் வாழ்வின் ஓர் அங்கமாகி விட்டன. ஆனால், இதற்கெல்லாம் மிக எளிதான, செலவில்லாத, தீர்வு நடைபயிற்சி தான்.
நடைபயிற்சி செய்ய யாருக்கும் தனியாக பயிற்சி தேவையில்லை; கருவிகளும், ஜிம்மும் தேவையில்லை. எங்கேயும், எப்போதும் செய்யக்கூடிய உடற்பயிற்சி இது. வயதானவர்களுக்கும், உடல் நலக்குறைவுள்ளவர்களுக்கும், அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருபவர்களுக்கும் கூட நடைபயிற்சி பாதுகாப்பானது.
சமீபத்தில் “6-6-6 ரூல்” என்ற நடைபயிற்சி முறை பிரபலமாகி வருகிறது. அதாவது காலை 6 மணிக்கு 60 நிமிடம் நடைபயிற்சி, மாலை 6 மணிக்கு 60 நிமிடம் நடைபயிற்சி, மேலும் 6 நிமிட வார்ம்-அப் மற்றும் 6 நிமிட கூல்-டவுன் அவசியம். காலை 6 மணிக்கு நடைபயிற்சி செய்வது நாள் முழுவதும் ஆற்றலை உயர்த்தும்; மாலை 6 மணிக்கு நடைபயிற்சி செய்வது வேலை அழுத்தத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்தும்.
6-6-6 நடைப்பயிற்சி நன்மைகள்:
நடைபயிற்சி உடலின் கொழுப்பைக் குறைத்து தசைகளை வலுப்படுத்துகிறது. இதனால் உடல் இயக்கம் சீராகி, மூட்டு வலி அல்லது சோர்வு போன்ற பிரச்சினைகள் குறைகின்றன. தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் திறன் அதிகரித்து, உடல் அதிகப்படியான ஆக்சிஜனை திறம்பட ஏற்றுக்கொள்ளும். இதுவே உடல் சகிப்புத்தன்மையை உயர்த்துகிறது.
இதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், நடைபயிற்சி இதயத்திற்கு பெரிய பாதுகாப்பாக அமைகிறது. இது இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துப், தமனிகள் அடைப்பைத் தடுக்கும். மனநலனிலும் நடைபயிற்சி குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையை ரசித்து நடப்பது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை சாந்தப்படுத்துகிறது.
இந்த நன்மைகளை உறுதிப்படுத்தும் வகையில், ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) வெளியிட்ட ஆய்வு குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வில், நடைபயிற்சி மேற்கொள்வோரில் 72% பேர் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர் என்பதும், தினசரி நடைபயிற்சி உடல் இயங்கும் முறையை மாற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதே ஆய்வு மேலும் ஒரு முக்கியமான உண்மையையும் வெளியிட்டுள்ளது: நடைபயிற்சி செய்யாதவர்களின் உடலில், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் ஆற்றல் கொழுப்பாக மாறி சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற அபாயங்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஆனால், தினசரி 30 முதல் 60 நிமிடம் வரை நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் இருந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும், தமனிகள் ஆரோக்கியமாகும் என்பதும் மருத்துவ வட்டாரங்களில் உறுதிபடுத்தப்பட்ட உண்மை.



