மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசைதான். ஆனால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது; வயது ஏறிக்கொண்டே போகிறது. இளமை திரும்பி வராது என்பது நிஜம். ஆனால், புதிய ஆய்வு ஒன்று இந்த நம்பிக்கையை சற்றே மாற்றி உள்ளது. ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால், ஆயுள் கூடுவதோடு, இளமைத் தோற்றமும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் சஞ்சய் சர்மா கூறுகையில், “தொடர்ச்சியான உடற்பயிற்சி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கிறது. முதுமையை தடுக்க முடியாது, ஆனால் அதனை தள்ளிப் போடலாம்,” என தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, சரியான நடைப்பயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் சுமார் 3 முதல் 7 ஆண்டுகள் வரை வாழ்நாள் அதிகரிக்கலாம். மேலும் மனஅழுத்தம் குறைந்து, புரிதிறன் மேம்படும் என்பதால் டிமென்ஷியா போன்ற மறதி நோயையும் தடுக்க முடியும் என்றார்.
மேலும் “இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டப் பயிற்சி செய்யக்கூடாது. அவர்களுக்கு மிக வேகமாகவும், பாடக்கூடிய அளவிலும் அல்லாமல், சமமாக, பேசக்கூடிய அளவிலான வேகத்தில் நடப்பது தான் சிறந்தது.” என்றார். 70 வயதிலும் நடைப்பயிற்சியைத் தொடரும் நபர்கள், 80 வயதிலும் இதயத் துடிப்பு சீர்கேடுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.